

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2026-ம் ஆண்டில் இதுவரை 1,076 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் மட்டும் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களாகப் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முறையான விசாக்கள் இன்றி, மெக்சிகோ அல்லது கனடா எல்லைகள் வழியாக ஆபத்தான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயல்கின்றனர். இது உள்ளூர் வட்டாரங்களில் "டன்கி வழிகள்" என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் எல்லையிலேயே பிடிபடுபவர்கள் அல்லது அங்குச் சென்ற பின் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்குபவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு நாடுகடத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே குடியேற்றம், மக்களின் நகர்வு மற்றும் நாடுகடத்தல் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றார். சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், இந்தியர்களின் சட்டப்பூர்வமான கல்வி மற்றும் வேலைக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், நாடு கடத்தப்படும் இந்தியர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் திருப்பி அனுப்புவதற்காக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை , இந்திய அரசாங்கத்துடன் இணைந்து சிறப்பு சாட்டர் விமானங்கள் மூலம் இவர்களைத் தங்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பது தங்களின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், தகுதியுடைய இந்திய மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் சட்டப்பூர்வமான விசா நடைமுறைகள் மற்றும் பயணங்கள் இதனால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்த நடவடிக்கைகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளே காரணம். எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துதல், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிதல் மற்றும் நாடுகடத்துதல் போன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால், சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த இந்தியர்கள் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் சட்டப்பூர்வ குடியேற்ற வாய்ப்புகளைப் பாதுகாக்கவும் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகின்றன.