மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.. விரைவில் இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் - டிரம்ப்

200 சதவீத வரி விதிக்கப்பட்டது.
மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.. விரைவில் இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் - டிரம்ப்
Published on

பிரதமர் மோடி தனது மிகச் சிறந்த நண்பர் என்று பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே விரைவில் ஒரு சுமூகமான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் "நாங்கள் நிச்சயம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவோம்.

ஏனெனில், உங்கள் நாட்டின் பிரதமரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்கிடையேயான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, நாங்கள் இணைந்து இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து முடிப்போம" என்று தெரிவித்தார்.

அதேநேரம், "அவர்கள் நமது நிறுவனங்கள் மீது மிகப்பெரிய அளவில் வரிகளை விதித்தனர், ஆனால் நாம் அவர்கள் மீது எந்த வரியும் விதிக்கவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு உதாரணமாக 'ஹார்லி-டேவிட்சன்' பைக் நிறுவனத்தை சுட்டிக்காட்டிய டிரம்ப், "கடந்த காலத்தில், ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க அவர்கள் அனுமதிக்கவில்லை. அதன் மீது 200 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இதனால், அந்த நிறுவனம் இந்தியாவிற்கே சென்று தங்களது சொந்த ஆலையை நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது எனது ஆட்சிக்கு முன்பு நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று கூறினார்.

இதற்கு நேர்மாறாக, இந்திய இருசக்கர வாகன நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் நுழையும் போது அமெரிக்க அரசு எந்த வரியும் விதிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், "இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. நாம் இப்போது இந்தியாவுடன் நல்ல லாபம் ஈட்டி வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க உயர்நிலைக் குழு இந்தியாவிற்கு வருகை தந்து, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து நான்கு நாட்கள் நடத்திய பேச்சுவார்த்தை நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com