ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை!

ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
Trump
Published on

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றமும் மோதலும் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தொடர்பான தனது மூலோபாயத்தில் முக்கிய மாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.

வெற்றி அறிவிப்புத் திட்டம்

சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால், அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.

அணுசக்தி மையங்கள் அழிவு

கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல் காரணமாக ஈரான் பின்வாங்கியுள்ளதாகவும் டிரம்ப் கருதுகிறார்.

உடன்பாடு எட்டப்பட்டால் விலக்கு

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரானால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிக்க டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்துவிட ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தச் செயல்பாட்டை முடக்கியுள்ளன.

பொருளாதாரத் தடைகள் நீக்கம்

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும். ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

எண்ணெய் விலை தாக்கம்

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் தலையீடு

போரை மேலும் விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கச் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் டிரம்புடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com