செங்கடலை பயன்படுத்த இஸ்ரேலுக்கு தடைவிதித்த ஹவுதி அமைப்பு!

ஹவுதியின் தாக்குதலை வெற்றிக்கரமாக இடைமறித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
செங்கடலை பயன்படுத்த இஸ்ரேலுக்கு தடைவிதித்த ஹவுதி அமைப்பு!
Published on

செங்கடலில் இஸ்ரேலின் கடல் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளதுடன், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

செங்கடலின் முக்கிய நுழைவாயிலான பாப் எல்-மந்தாப் நீரிணையை இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

“செங்கடலில் இஸ்ரேலிய கடல்வழிப் போக்குவரத்திற்கு முழுமையான மற்றும் மொத்தத் தடையை நாங்கள் அறிவிக்கிறோம்” என ஹவுதிகளின் ஆயுதப் படைகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தருணத்திலிருந்து, செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள் அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்களின் இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய ராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹவுதி அமைப்பின் இந்த தடையால் இஸ்ரேலின் சரக்கு கப்பல்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் முனையைச் சுற்றி நீண்ட தூரம் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் அரசால் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த தாக்குதலை தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக இஸ்ரேலும் அறிவித்துள்ளது.

காஸா, லெபனான் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, தாங்கள் இந்தத் தடையையும், ஏவுகணைத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக ஹூதி அமைப்பு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com