

பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பின் தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸின் அரசியல் தலைமையின் நீண்டகால உறுப்பினரான கலீல் அல் ஹய்யா, அந்த அமைப்பின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராவார்.
காசாவின் ஷஜாய்யா மாவட்டத்தைச் சேர்ந்த அல் ஹய்யா, ஹமாஸை உருவாக்கிய தலைவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.
அவர் ஹமாஸின் அரசியல் குழுவில் நீண்டகால உறுப்பினராக இருந்ததுடன், அக்குழுவின் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
காசாவிலும் சர்வதேச அளவிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்த அமைப்பின் பிரதான குரலாக விளங்கினார்.
இஸ்ரேலின் 'மிகவும் தேடப்படும்' பட்டியலில் உள்ள தலைவர்களில் அல் ஹய்யாவும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக கத்தாரின் தோஹாவில் தங்கியிருந்தார்.
இஸ்ரேலுடனான மோதல்களின் போது, அவரது வீடுகளும் அலுவலகங்களும் இஸ்ரேலிய படைகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.
யஹ்யா சின்வாரின் மரணத்தைத் தொடர்ந்து ஹமாஸ் சந்தித்து வரும் உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்துள்ளது.
புதிய தலைமையின் கீழ் ஹமாஸின் இராஜதந்திர மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மாறுமா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகிறது.
ஏற்கனவே காசாவில் இருந்த தங்கள் அரசு நிர்வாகத்தை ஹமாஸ் கலைத்தது. அமெரிக்கா தலைமையில் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் அரசை ஹமாஸ் கலைத்தது.
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்கி வருவதாலும், காசாவுக்குள் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்களை உள்ளே வர விடாமல் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாலும் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே ஒப்பந்தபடி தங்கள் அரசை கலைத்து, சர்வதேச சமூகத்தின் மூலமும் அமெரிக்கா மூலமும் இஸ்ரேலுக்கு நெருக்கடி அளிக்கவே ஹமாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காசாவை நிர்வகித்து வந்த தங்கள் அரசை கலைத்ததாக கூறபடுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள மற்றொரு நிபந்தனையான ஆயுதங்களை கைவிடும் நிபந்தனைக்கு ஹமாஸ் உடன்பட தொடர்ந்து மறுத்து வருகிறது.
காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதன் உரிமைகளை பறிப்பதாக கூறி, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
பழிவாங்கவும், பணய கைதிகளை மீட்கவும் காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் தலையீட்டில் பெயரளவில் முடிவுக்கு வந்தது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,000 த்தை கடந்துள்ளது. இதில் பாதி பேர் காசாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் மீதான தாக்குதல் போர்வையில் மக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியும், செயற்கையான பஞ்சத்தை உருவாக்கியும், கட்டாய இடப்பெயர்வு செய்ய வைத்தும் இன அழித்தொழிப்பில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவை போர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.