காசா அமைதித் திட்டம்: 'நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன நாடு அமையாது'-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி!

டிரம்ப் நிர்வாகத்தின் 'அமைதி வாரியம்' தயாரித்த 15 அம்ச வரைவுத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்காது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
 Benjamin Netanyahu
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார். அத்துடன், காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நெதன்யாகு, "நான் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகிக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

15 அம்சத் திட்டம் நிராகரிப்பு

டிரம்ப் நிர்வாகத்தின் 'அமைதி வாரியம்' தயாரித்த 15 அம்ச வரைவுத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்காது என நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிடும் வரை, காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அங்குள்ள தங்களின் தற்போதைய நிலைகளில் இருந்து பின்வாங்காது. இஸ்ரேலியப் படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிராக வரும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபடும் என உறுதியளித்துள்ளார்.

டிரம்பின் 15 அம்ச அமைதித் திட்டம்-ஒரு பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட இந்த வரைவுத் திட்டம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கட்டமைப்புப் பாதையை வழங்குகிறது:

*ஹமாஸ் அமைப்பு காசாவின் சிவில் நிர்வாகப் பொறுப்புகளைப் பாலஸ்தீனத் தொழில்முறைப் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

*ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதைகள், கனரக ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் கண்டறியப்பட்டு, அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

*இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கும் இடையே கண்காணிப்புப் பணிகளைச் செய்ய சர்வதேச அமைதிப் படை நிறுத்தப்படும்.

*ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகக் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.

ஹமாஸ் அமைப்பின் நிபந்தனை

அமெரிக்காவின் இந்த வரைவுத் திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க மறுத்துள்ளது.

* இஸ்ரேல் முதலில் தன் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

* ஷார்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் படைகளை பின்வாங்கி, காசாவிற்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.

* இதன் பின்னரே ஆயுதங்களைக் ஒப்படைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என ஹமாஸ் மூத்த அதிகாரி காசி ஹமாத் தெரிவித்துள்ளார்.

8 முஸ்லிம் நாடுகளின் கூட்டு எச்சரிக்கை

அமெரிக்காவின் அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் செயல்படுவதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தொடர் ராணுவத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவை எச்சரித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்திட்டத்தைப் பெரிய திருப்புமுனை என வர்ணித்த போதிலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்புகளும் முன்வைக்கும் முரண்பாடான நிபந்தனைகளால் அமைதித் திட்டம் பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com