

'டால்பின்' புயலால் சீனாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை சீனாவின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் அருகே மணிக்கு 151 கி.மீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது.
புயலின் தீவிரத்தால் ஷாங்காய் நகரிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஹாங்சோ விமான நிலையத்திலும் 270க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகு போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. பல ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தைத் 'நௌல்' என்ற புயல் தாக்கி சேதகங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது 'டால்பின்' புயல் தாக்கியுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.
அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றினால் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த புயலால் தைவானின் வடக்குப் பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.