ஹெப்ரான் துப்பாக்கிச் சூட்டில் 7 மாதக் குழந்தை பலி-இஸ்ரேல் ராணுவம் விளக்கம்!

"மேற்குக் கரைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது"
7-Month-Old Baby Killed in Hebron Shooting
Published on

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெப்ரான் நகரின் டெல் ருமைடா பகுதியில் நேற்று (ஜூன் 5) இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாம் ஃபஹத் அபு ஹைகல் என்ற 7 மாத கைக்குழந்தையுடன், பெத்லகேம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் குழந்தையின் தந்தை ஃபஹத் மற்றும் தாய் ஆகியோர் தங்கள் காரில் ஹெப்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் காரை நோக்கி நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில், காரின் முன்பக்கக் கண்ணாடியைத் துளைத்துச் சென்ற குண்டு, குழந்தையின் தலையில் பாய்ந்து, தாயின் கன்னப் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில், லேசான காயங்களுடன் உயிர் பிழைத்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் இந்த துயர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது: அதில், "ஹெப்ரான் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனம் தங்களை நோக்கி வேகமாக வருவதை பார்த்த வீரர்கள் காரை நோக்கிச் சுட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் இச்சம்பவத்தில் தொடர்பில்லாத 'சாதாரண பொதுமக்கள்' என்று தெரியவந்துள்ளது. இந்தத் தவறுதல்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்." இச்சம்பவம் குறித்து ராணுவம் முறையான முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேற்குக் கரைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com