

பாரீஸ்:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 60 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று பந்தயத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜெர்மனி வீராங்கனை லூய்சா நிமெஸ்ச்சை எதிர்கொண்டார்.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாக்ஷி மாலிக் 1-3 என்ற புள்ளி கணக்கில் லூய்சாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். சாக்ஷி ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ பிரிவில் கலந்து கொண்டார். அவர் சமீபத்தில் 60 கிலோவுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 0-5 என்ற புள்ளி கணக்கில் 2 முறை ஜூனியர் உலக சாம்பியனான அமெரிக்காவின் விக்டோரியா அந்தோணியிடம் தோல்வி கண்டார்.
69 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் 5-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் ஒசிர்பாத்திடம் வீழ்ந்தார். 53 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஷீதல் தோமர் 2-4 என்ற புள்ளி கணக்கில் ருமேனியாவின் எஸ்தர் டோப்ரேவிடம் தோல்வி அடைந்தார். மல்யுத்த போட்டியில் தங்களை வீழ்த்திய நபர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அவரிடம் தோல்வி கண்டவர்களுக்கு ‘ரிபிசாஜ்’ மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பில் அதிகபட்சமாக வெண்கலப்பதக்கம் வரை வெல்லமுடியும். அந்த வாய்ப்பு தோல்வி கண்ட 4 இந்திய வீராங்கனைகளுக்கும் கிடைக்கவில்லை.