

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று 2 போட்டிகள் கொண்டதாகும். இதில் ஒரு போட்டி லண்டனில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, இங்கிலாந்து, தென்கொரியா, சீனா, மலேசியா அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, கனடா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. மற்ற லீக் ஆட்டங்களில் தென்கொரியா-அர்ஜென்டினா, நெதர்லாந்து-பாகிஸ்தான், இங்கிலாந்து-சீனா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 17-ந் தேதி கனடாவையும், 18-ந் தேதி பாகிஸ்தானையும், 20-ந் தேதி நெதர்லாந்தையும் சந்திக்கிறது.
இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியில் வழக்கமான கேப்டனும், கோல்கீப்பருமான ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக நடுகள வீரர் மன்பிரீத்சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தசைப்பிடிப்பு காரணமாக ரூபிந்தர்பால்சிங் கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகி உள்ளார். குடும்பத்தின் அவசர தேவை காரணமாக உத்தப்பா நாடு திரும்பி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் பதிலாக ஜஸ்ஜித்சிங் குலார், சுமித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் (ஜூலை) நடக்கிறது. அதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு அரைஇறுதி சுற்று போட்டிகளில் இருந்து 7 அணிகள் டிசம்பர் மாதத்தில் புவனேஸ்வரில் நடைபெறும் உலக ஆக்கி லீக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.