

நாமக்கல்:
வருடந்தோறும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமையில் உலக முட்டை தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இன்று உலக முட்டை தினத்தையொட்டி நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் கெனின் நிறுவனம் இணைந்து முட்டை சாப்பிடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது.
பேரணியை மாநில கோழிபண்ணையாளர் சங்க தலைவர் சின்ராஜ், மாநில முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன், கால்நடை மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவ, மாணவிகள் முட்டை சாப்பிடுவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் கிடைக்கும் சத்துக்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் முட்டை சாப்பிடுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இந்த பேரணி நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் தொடங்கி மணிக்கூண்டு, ஸ்டேட் பேங்க், மோகனூர் ரோடு வழியாக வந்து மீண்டும் அரசு மருத்துவமனையை அடைந்தது.
இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.