

செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52) ஆடு மேய்க்கும் தொழிலாளி.
கடந்த 12-ந்தேதி கோபால கிருஷ்ணன் குளமந்தை கிராமத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதன் (77) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகள் மேய்ந்தன.
இதனைப் பார்த்து ஆத்திர மடைந்த வரதன் இழப்பீடாக கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான 3 ஆடுகளை பிடித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் அவரது மனைவியிடம் கூறி வேதனைப் பட்டுள்ளார். அதற்கு மறுநாள் கோபாலகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி குளமந்தை கிராமத்திற்கு சென்று ரூ.1000 இழப்பீடாக கொடுத்துவிட்டு ஆடுகளை மீட்டு வந்தார்.
இந்தநிலையில் வெளியே சென்ற கோபாலகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர். வரதன் நிலத்திற்கு அருகில் உள்ள மரத்தில் கோபாலகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சரஸ்வதி அனக் காவூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் கோபால கிருஷ்ணனை வரதன் அடித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி செய்யாறு வந்தவாசி சாலையில் கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் நேற்று மாலை சாலை மறியல் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.