திருச்சியில் சாலையோரம் தூங்கிய தொழிலாளி கொலை

திருச்சியில் இன்று அதிகாலையில் சாலையோரம் தூங்கிய தொழிலாளியை கொலை செய்த சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

மலைக்கோட்டை:

திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் (வயது 55). இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கொட்டகுடி. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மலைக்கோட்டை பகுதியில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பொறுக்கி விற்று வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் சில வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்து தனியாக இருந்தார். கிடைக்கும் வருமானத்தை கொண்டு சாப்பிட்டு, கடை முன்பும், சாலையோரங்களிலும் தூங்கி வந்தார்.

பெரும்பாலும் கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள செருப்பு கடை முன்பு இரவில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் இவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளி வாசல் தெருவை சேர்ந்த காஜாமைதீன் (38) வந்தார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கோட்டை காவல் நிலைய சரகதிற்கு உட்பட்ட பெரிய கடை வீதி, சவுக்கு பள்ளிவாசல் மைதானத்திலேயே தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை முன்பு துணி வியாபாரம் செய்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் திடீரென பாறாங்கல் ஒன்றை தூக்கி தூங்கி கொண்டிருந்த செல்வராஜின் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளின் இரவு காவலர்கள் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் காஜாமைதீன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை கூடுதல் கமி‌ஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கியிருந்த சைக்கோ கொலையாளி காஜாமைதீனை கைது செய்தனர்.

அவர் எதற்காக நெல்லையில் இருந்து திருச்சிக்கு வந்தார், சைக்கோ கொலையாளியாக மாறியது ஏன்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கொலையுண்ட செல்வராஜூக்கும், காஜாமைதீனுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த போதுதான் செல்வராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com