பொன்னேரி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைப்பிடித்து பெண்கள் மறியல்

பொன்னேரி அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள் 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைப்பிடித்து பெண்கள் மறியல்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தை சுற்றி காஞ்சிவாயல், ஆலப்பன்நகர், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு வேப்பம்பட்டில் இருந்து திருப்பாலைவனத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த 7 அரசு பஸ்களை சிறைப்பிடித்து தண்ணீர் வழங்கினால்தான் பஸ்களை விடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

ஆனாலும் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “ஒரு மாதமாக தண்ணீர் வராததால் கூலி வேலைக்கு போக முடியவில்லை. வாரத்திற்கு ஒருநாள்தான் குளிக்க வேண்டிய நிலை உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாலையில் உட்கார்ந்தோம்” என்றனர்.

அடிக்கடி ஏற்பட்டு வந்த மின்வெட்டு காரணமாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. மோட்டார் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார தடையால் மோட்டார் தொடர்ந்து இயக்க முடியாததால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதித்தது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com