கதிராமங்கலத்தில் மண் சோறு சாப்பிட்டு பெண்கள் போராட்டம்

கதிராமங்கலத்தில் பெண்கள், வாழை இலையில் மண் வைத்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கதிராமங்கலத்தில் மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
கதிராமங்கலத்தில் மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் தோப்பில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 16-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பெண்கள், வாழை இலையில் மண் வைத்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. ஆய்வால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் காவி நிறமாக மாறி உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் போதிய அளவு வருவதில்லை. மழையும் குறைந்துவிட்டது. இதனால் நிலத்தடி நீரை நம்பிதான் வாழ வேண்டிய நிலை உள்ளது. ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகள் தொடர்ந்தால் உண்பதற்கு உணவு இல்லாமல் மண்ணை தான் சாப்பிட வேண்டிய நிலை வரும். இதனை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து இயற்கையை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. இதை உணர்த்தும் வகையில் தான் மண்சோறு சாப்பிடுகிறோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சந்தித்து பேசினார். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வன தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது ஆதராவர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் 3 நாள் பரோல் முடிந்து நேற்று திருச்சி சிறைக்கு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com