சிவகாசியில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடையை சூறையாடிய பெண்கள்

சிவகாசியில் மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடி, மது பாட்டில்கள், மேஜை, நாற்காலிகளை உடைத்து தீ வைத்து எரித்தனர்.
சிவகாசியில் மதுக்கடையை சூறையாடிய பெண்கள், பொருட்களை வெளியே தூக்கிவந்து வீசிய காட்சி.
சிவகாசியில் மதுக்கடையை சூறையாடிய பெண்கள், பொருட்களை வெளியே தூக்கிவந்து வீசிய காட்சி.
Published on

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த மதுக்கடை விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கவிதா நகருக்கு சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால், அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த கடையை திறந்து மதுக்கடை ஊழியர்கள் விற்பனையை தொடங்கினர்.

இதுபற்றி அறிந்த அதன் சுற்றுவட்டார பகுதி பெண்கள் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் திலகபாமா தலைமையில் அங்கு சென்றனர். பின்னர் கடையில் இருந்த 2 ஊழியர்களையும் வெளியேற்றி விட்டு கடையின் கதவை உடைத்து எறிந்தனர். மதுபாட்டில்களை எடுத்து வந்து உடைத்து நொறுக்கியதோடு கடையில் இருந்த மேஜை, நாற்காலி, குளிர்சாதன பெட்டியையும் உடைத்து நொறுக்கி, அவற்றை தீ வைத்து எரித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கடையை சூறையாடியவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கி வந்த மதுக்கடை மூடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டூர் ஏரிக்கரை குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த கடை திறக்கப்படாமல் இருந்தது. திறக்கப்படாமல் இருந்த அந்த கடையில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்ததாக தெரிகிறது.

இதனால் நேற்று காலை பாண்டூரில் உள்ள உளுந்தூர்பேட்டை- திருவெண்ணெய்நல்லூர் சாலையில் காலி மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

பின்னர் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்த மதுக்கடைக்கும், புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடைக்கும் பூட்டு போட்டுவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com