ஓசூர் அருகே வாடகை தாயாக செயல்பட்ட பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் சித்ரவதை

ஓசூர் அருகே வீட்டுக்குள் சிறை வைத்து வாடகை தாயாக செயல்பட்ட பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டை படத்தில் காணலாம்.
பெண்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டை படத்தில் காணலாம்.
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை அருகே உத்தனப்பள்ளி பஜார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் அந்த வீட்டில் இருந்தனர். அந்த பெண்களுக்கு பாதுகாப்பாக ஒரு கும்பல் இருந்தது. அந்த கும்பல் பொதுமக்களை விரட்டி அடித்தது. 

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர், அவர்களை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. 

வீட்டிற்குள் இருந்த 2 பெண்களிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண் வாடகை தாயாக செயல்பட்டதும், அவருக்கு கருகலைந்து விட்டதால் அந்த பெண்ணை சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. உத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு குழந்தை இல்லை. இதனால் வாடகை தாய் என்று அசாமில் இருந்து ஒரு பெண்ணை இங்கு அழைத்து வந்து அவரை பராமரித்து வந்தார். அந்த பெண்ணுக்கு அசாம் மொழி மட்டுமே தெரியும் என்பதால் அவருக்கு உதவியாக அதே ஊரில் இருந்து இன்னொரு பெண்ணை தங்க வைத்ததும் தெரியவந்தது. 

பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் உத்தனப்பள்ளி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசாருக்கு உத்தனப்பள்ளி போலீசார் தகவல் தெரிவித்தனர். இன்று மகளிர் போலீசார் அங்கு நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர். பெண்ணை வாடகை தாயாக அழைத்து வந்தவர் யார்? அவருக்கு புரோக்கராக செயல்பட்டது யார்? அந்த பெண்ணுக்கு வாடகை தாயாக சிகிச்சை அளிக்க எந்த ஆஸ்பத்திரி துணையாக இருந்தது? உண்மையில் அந்த பெண் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டாரா? என்ற முழு விவரமும்  மகளிர் போலீசாரின் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அசாம் பெண் உத்தனப்பள்ளியில் சித்ரவதை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ உண்மையா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com