

சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை பாரில் ஊழியராக இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜுலை 23-ந்தேதி கடலாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக திலகவதி பணியாற்றினார். பணியில் இருந்த முனியசாமியிடம் ‘மதுபார்’உரிமையாளர் யார்? என்று கேட்டார்.
அப்போது அவர் இங்கு இல்லை வெளியே சென்று இருக்கிறார் என்றார். நான் இந்த போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் ஏன் இன்னும் வந்து என்னை பார்க்கவில்லை என்று கூறி முனியசாமியின் கன்னத்தில் அறைந்தார்.
அத்துடன் விடாமல் அவரை ‘தரதர’வென பாரில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கினார். மேலும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு மதுபார் உரிமையாளர் வந்து பார்த்தபிறகு முனியசாமியை விடுவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு மனித உரிமைகள் கமிஷனில் முனியசாமி புகார் செய்தார். அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் புகார் செய்து 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி ஊழியரை அடித்து உதைத்து கன்னத்தில் அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் திலவகதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத தொகையை ஊழியர் முனியசாமிக்கு இழப்பீடு ஆக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினர் டி.ஜெயச்சந்திரன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். வழக்கு விசாரணையின் போது தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி மறுத்தார். ஆனால் மனித உரிமைமீறல் நடந்துள்ளதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. #Tamilnews