இருவரது பெற்றோரும் வீட்டை பூட்டி சென்றதால் காதல் கணவர் உடலுடன் வீதியில் நின்ற பெண்

உடல் நலக்குறைவால் இறந்த காதல் கணவரது உடலுடன் பெண் வீதியில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள தோகூர் காமராஜர் நகரைச்சேர்ந்தவர் முருகேசன் (வயது75) திருவெறும்பூரில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் மூர்த்தி (45) இவர் 1996-ம் ஆண்டு அதே தெருவில் வசிக்கும் வீரமணி என்பவரின் மகள் கவிதா(35)வை காதலித்து மணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் மூர்த்தியும், கவிதாவும் திருச்சி அருகே உள்ள குமரேசபுரத்தில் தங்கி இருந்தனர். மூர்த்தி தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளி ஆக வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆனதில் இருந்து இருதரப்பு பெற்றோர்களும் இவர்களை தங்கள் குடும்பத்தில் சேர்த்து கொள்ளவில்லை.மூர்த்தியின் தந்தை முருகேசன் தங்களுக்கு குடும்பத்தில் மூர்த்தியை சேர்த்துக் கொள்வதில்லை என்று எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 8-ந் தேதி இரவு மூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனால் மூர்த்தியின் உடலுடன் தோகூர் வந்த கவிதா உடலை மூர்த்தியின் தந்தை வீட்டிற்கு கொண்டு சென்றார். மூர்த்தியின் தந்தை முருகேசனின் வீடு பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா தோகூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் தோகூர் போலீசார் வந்து பார்த்த போது வீடு பூட்டியிருந்தது. தொலைபேசியில் பேசியபோது தங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று மூர்த்தி எழுதிக் கொடுத்திருப்பதாக சொல்லியுள்ளனர். மேலும் மூர்த்தியின் தந்தை முருகேசனும் தோகூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அவர் தான் வெளியூர் சென்றிருப்பதாகவும் தன் வீட்டில் அத்து மீறி யாரும் நுழைய முயன்றால் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.

இது போன்ற நிலையில் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி முருகேசனின் வீட்டின் முன்புறம் வைத்து சடங்குகளை செய்து நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். மூர்த்தியின் மனைவி கவிதாவின் வீட்டினரும் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் நேற்று தோகூர் காமராஜர் நகர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com