

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பனங்காலவிளையை சேர்ந்த தேவநேசமணி மனைவி பிருந்தா. இவருடைய தாய் ஷோபா மின்னி (வயது 58). இவர் பிருந்தாவின் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் ஷோபா மின்னி வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ ஷோபா மின்னி அருகே வந்து நின்றது. அந்த ஆட்டோவில் இருந்து டிரைவர் கீழே இறங்கி, ஷோபா மின்னியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். டிரைவருடன் மற்றொருவரும் இருந்தார். தண்ணீர் எடுத்து வர வீட்டுக்குள் செல்ல திரும்புவதற்குள், ஆட்டோ டிரைவர் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவர் உள்பட 2 பேரும் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபா மின்னி சத்தம் போட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிருந்தா மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கொடுங்குளம் பந்தியறவிளைவீட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (35), ஆட்டோவில் இருந்த கண்டால் தெரியும் நபர் ஒருவர் ஆகிய 2 பேரும் நகையை பறித்துச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் பிரபு உள்பட 2 பேர் மீது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவர் பிரபுவை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் இருந்த மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.