பெண் மர்ம சாவு: போலீசாரால் தேடப்பட்ட விவசாயி தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கொன்றம்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 35).
நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் தூககில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் உறவினர்கள் புகார் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து போலீசார் மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மகேஸ்வரி சாவதற்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவரது மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார் என்று கிராம மக்கள் தகவல் தெரிவிதனர். இதைத்தொடர்ந்து கோவிந்தசாமியை போலீசார் தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த கோவிந்தசாமி திடீரென்று தலைமறைவானார். இன்று காலை அவர் திப்பம்பட்டியில் இருந்து இருமத்தூர் செல்லும் சாலையில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் தூக்கில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மகேஸ்வரி சாவில் தன்னை போலீசார் விசாரிப்பார்கள் என்று பயந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

