கழுத்தை நெரித்து பெண் கொலை- உறவினர் கைது

மதுரையில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் அவரது உறவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

புதூர்:

மதுரை சிலைமான் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்லம்மாள் (வயது 65). மனோகரன் இறந்து விட்டதால் செல்லம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் டைட்டஸ் (27). இவரது மனைவி கவிதா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வதாக கவிதா கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் தனது உறவினரான செல்லம்மாளிடம் விட்டு விட்டு டைட்டஸ் தனது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த டைட்டஸ், தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி செல்லம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த டைட்டஸ் செல்லம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து செல்லமாளின் உறவினர் பெண்ணான நாகலெட்சுமி சிலைமான் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டைட்டசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com