

தியோகர்:
ஒடிஷா மாநிலம் கெனோஜ்ஹர் மாவட்டம் டெல்கோய் பகுதியை சேர்ந்தவர் குனி என்ற சபரி முர்மு. இவர் கலிங்கா நகர் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இவர்மீது போலீஸ் அதிகாரியை கடத்தியது, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், பழங்குடி மக்களை ஏமாற்றி மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், டியோகர் மாவட்ட போலீசாரிடம் இன்று சரணடைந்தார். அப்போது தன்னிடம் இருந்த ஆயுதங்களையும் அளித்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி சாரா சர்மா கூறுகையில், ‘’மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் செயல்பாடுகள் திசைமாறி போவதை உணர்ந்த குனி, அவர்களது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தார்.
மூத்த தலைவர்கள் அளிக்கும் பாலியல் தொந்தரவால் பெண் உறுப்பினர்கள் மனதாலும், உடலாலும் கொடுமைக்கு உள்ளாவதை பார்த்து வேதனை அடைந்தார். இதையடுத்து அவர் ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தார்’’ என தெரிவித்தார்.