

பல்லடம்:
பல்லடம் காளிவேலம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). இவரது மனைவி சாந்தாமணி (35).இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு பிரவீன் (13), பிரசன்னா (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். சாந்தாமணி நேற்று காலை மிக்சியில் சட்னி அரைத்துவிட்டு மிக்சியை தள்ளி வைத்துள்ளார். அப்போது மின்சார வயரை எலிக்கடித்து இருந்ததால் வயரில் இருந்த தாமிரக்கம்பி வெளியில் தெரிந்துள்ளது. இதனை கவனிக்காத சாந்தாமணி சுவிட்சை அணைக்காமல் மிக்சி வயரை சுற்றி வைக்க முயன்றார். அப்போது சாந்தாமணியின் கையில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்டு சாந்தாமணி படுகாயம் அடைந்தார். மின்சாரம் தாக்கியதில் அவர் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாந்தாமணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சாந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.