பெண் வெட்டிகொலை: மது குடிக்க பணம் தர மறுத்ததால் கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்

ராயக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தரமறுத்ததால் மனைவியை வெட்டி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் வெட்டிகொலை: மது குடிக்க பணம் தர மறுத்ததால் கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது நார்ப்பனட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா (38). இவர்களுக்கு ஷில்பா என்ற மகளும், வெங்கடேஷ் என்கிற சித்தேஷ் என்ற மகனும் உள்ளனர்.

சீனப்பா வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சித்தேஷ் வேலைக்கு சென்று சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தனது சகோதரி ஷில்பாவிடம் கொடுத்து வைத்திருந்தார். சீனப்பா மது குடித்து விட்டு அந்த தொகையை அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு சீனப்பா வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பத்மா தூங்க சென்றுவிட்டார்.

மதுகுடிக்க பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த சீனப்பா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டிருந்த பத்மாவின் தலை, கழுத்து மற்றும் கைகளில் வெட்டினார். வலியால் அலறிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன், மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே சீனப்பா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் அவர்கள் சீனப்பாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரிடம் கொலையாளி சீனப்பாவை ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் கொலையுண்ட பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பத்மாவின் சகோதரி லலிதா கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்டபாக சீனப்பாவிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன். எனக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் குடிக்க பணம் கேட்டு எனது மனைவியிடம் தகராறு செய்து வந்தேன்.

இந்த நிலையில் எனது மகன் சித்தேஷ் சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை அவரது தாய் பத்மாவிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் மனைவி பத்மாவை கொன்று விடுவது என்று முடிவு செய்து அவர் தூங்கி கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் தலையில் வெட்டினேன். பின்பு கழுத்து மற்றும் கைகளில் வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது உறவினர்களும், ஊர்க்காரர்களும் பிடித்து கொண்டனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com