

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்தபத்மநாபபுரம் ஆசிரியர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி புஷ்பம் (வயது 55).
அனந்த பத்மநாபபுரம் பகுதியில் இவர்கள் கடை நடத்தி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அதிகாலையில் கடையை திறந்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்த புஷ்பத்திடம் சிகரெட் வாங்கினார். அப்போது புஷ்பத்தின் கவனம் திசைதிரும்பியபோது அந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 9½ பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலிங்கமும், புஷ்பமும் கொள்ளையனுடன் போராடினார்கள். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் கணவன், மனைவியை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு கொள்ளையன் நகையுடன் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையன் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் அதை சோதனை செய்தபோது ஒரு செல்போனும், டைரியும் இருப்பதை கண்டு பிடித்தனர்.
அதன்மூலம் அவர்கள் கொள்ளையனை பிடிக்க துப்புதுலக்கி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் கொள்ளையனின் மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பர் பிளேட் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்ராஜ் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முப்பந்தல் பகுதி வழியாக ஆரல்வாய்மொழி நோக்கி சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் வந்து கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் புஷ்பத்திடம் 9½ பவுன் நகையை பறித்த கொள்ளையன் என்பது தெரியவந்தது. அவரது பெயர் ராஜன் (43). காவல்கிணறு அருகே உள்ள அழகியநம்பியாபுரம் பகுதியை சேர்ந்தவர். பூக்களை மொத்தமாக வாங்கிவந்து தோவாளை மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பூ வியாபாரி ஆவார்.
அவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. மேலும் பணகுடி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கில் கைதாகி 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற ராஜன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்து உள்ளார். இந்த நிலையில்தான் புஷ்பத்திடம் 9½ பவுன் நகையை கொள்ளையடித்து போலீசில் சிக்கி உள்ளார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.