வெள்ளகோவில் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

வெள்ளகோவில் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை திருட்டு
நகை திருட்டு
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 48).

சம்பவத்தன்று ராஜேஸ்வரி தனது தாயார் சம்பூர்ணத்துடன் வெள்ளகோவிலில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். ராஜேஸ்வரியின் மொபட் கரட்டுப்பாளையம் அருகே உள்ள மயில்ரங்கம் ரோட்டில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேஸ்வரியின் மொபட்டை கீழே தள்ளினர்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி திருடன்... திருடன்.. என சத்தம் போட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராஜேஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளகோவில் பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் பெண்கள் தங்கள் கழுத்தில் கவரிங் செயின் அணியவே யோசிக்கின்றனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை போலீசார் விரைவில் பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com