

அமராவதி:
தெலுங்கானா மாநிலத்தை பசுமை மயமாக்கும் நோக்கத்தில் வனப்பகுதிகளில் மரங்களை நட்டு, பராமரித்து வளர்க்கும் ‘ஹரிதா ஹரம்’ என்னும் திட்டத்தை அம்மாநில அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அவ்வகையில், கொம்மரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வனத்துறை ரேஞ்ச் அதிகாரி அணிதா தலைமையில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது.
அப்போது, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் ஆளும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி பிரமுகருமான கோனேரு கண்ணப்பாவின் சகோதரரான கோனேரு கிருஷ்ணா என்பவர் தலைமையில் சிலர் கும்பலாக அங்கு வந்தனர்.
அங்கு மரம் நடவு செய்த வனத்துறையினர் மீது மூங்கில் கம்புகளால் சரமாரியாக அவர்கள் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் பெண் அதிகாரி அணிதா அங்கிருந்த டிராக்டர் மீது ஏறி தப்பிக்க முயன்றார்.
அவரை விரட்டிச் சென்றவர்கள் கனத்த மூங்கிலால் அணிதாவின் தலையில் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து மயங்கி சாய்ந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோனேரு கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆளும்கட்சி ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.