திருப்பத்தூரில் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் மரணம்

செல்போனில் டாக்டர்களிடம் சந்தேகம் கேட்டு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவ அதிகாரிகள் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
பரீதா
பரீதா
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இம்ரான் (வயது 30). இவரது மனைவி பரீதா (25). இவர் கடந்த 21-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே பரீதா உயிரிழந்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முறையாக சிகிச்சை அளிக்காததால் பரீதா இறந்ததாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் உடலை பெற்று சென்றனர்.

பரீதா உயிரிழப்பு குறித்து மருத்துவம மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ரத்தினாவதி தலைமையில், இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் (திருப்பத்தூர்) சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களிடம் 2 கட்டமாக விசாரணை நடத்தினர். 3-ம் கட்ட விசாரணை நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.

பரீதா பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. நர்சுகளே பரீதாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவம் பார்ப்பதில் சந்தேகம் அடைந்த அவர்கள் டாக்டர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, டாக்டரின் ஆலோசனையை கேட்டு பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.

குழந்தை பிறந்த பிறகு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் நர்சுகள் பிரசவ வார்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அதன் பிறகே பரீதா உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் விசாரணை அதிகாரிகளையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 3-ம் கட்ட விசாரணை அறிக்கை, மருத்துவ அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com