சிவகாசியில் திருமண மண்டப சுவர் இடிந்து பெண் பலி

சிவகாசியில் இன்று திடீரென திருமண மண்டபத்தின் 30 அடி சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். காயமடைந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது
மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது
Published on

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர் சிலை அருகே திருமண மண்டபம் உள்ளது. இதனை விரிவுப்படுத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை மண்டபத்தில் உணவு பரிமாறும் கூடத்தை சீரமைப்பு செய்வதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் நடந்து வந்தன.

அப்போது அதிக அதிர்வு ஏற்பட்டது. இதனை ஜே.சி.பி. டிரைவர் பொருட்படுத்தவில்லை. எனவே திடீரென மண்டபத்தின் 30 அடி சுவர் இடிந்து வெளிப்புறமாக சரிந்தது.

இதனால் பக்கத்து தெருவில் நடந்து சென்ற 6 பேர் மீது சுவர் சரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கிய அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (வயது 65), ஜீவா (30), கன்னியம்மாள் (55), நாகம்மாள் (70), அங்கம்மாள் (73), சண்முகம் (73) ஆகிய 6 பேர் மீட்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த அவர்களை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே கன்னியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை கலெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com