

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற நாட்டு சாராயக் கடையில் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளரை கைது செய்யும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராம் ஷ்வராப் சிங் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பேரன்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.