விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையரில் முதல் முறையாக பங்கேற்கிறார் ஜீவன் நெடுஞ்செழியன்

விம்பிள்டன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன் முதல் முறையாக விளையாட உள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையரில் முதல் முறையாக பங்கேற்கிறார் ஜீவன் நெடுஞ்செழியன்
Published on

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இரட்டையர் பிரிவில் நேரடியாக தகுதி பெறுவதற்கு இரண்டு பேரின் தரவரிசை புள்ளியின் கூட்டு எண்ணிக்கை 160-க்குள் இருக்க வேண்டும்.

இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஜீவன் நெடுஞ்செழியன் இரட்டையர் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கிறார். அவர் 55-ம் நிலை வீரர் தென்கொரியாவின் ஹியோன் சங்குடன் இணைந்து முதல் முறையாக விம்பிள்டனில் விளையாட இருப்பதாகவும், இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வேண்டும் என்ற தனது கனவு நனவாகப் போவதாகவும் சில தினங்களுக்கு முன்பு உணர்ச்சிப்பெருக்கோடு கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கணுக்கால் காயத்தால் ஹியோன் சங் கடைசி நேரத்தில் பின்வாங்க, ஜீவன் நெடுஞ்செழியன் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதையடுத்து அடுத்து யாருடன் கைகோர்ப்பது என்று குழப்பத்தில் தவித்தார். அதுவும் 24 மணி நேரத்திற்குள் புதிய ஜோடியை தேர்வு செய்தாக வேண்டிய நெருக்கடியில், ஒரு வழியாக அமெரிக்க வீரர் ஜாரெட் டொனால்ட்சனை ஜோடியாக்கி விட்டார். ஜாரெட் டொனால்ட்சன் தரவரிசையில் 65-வது இடம் வகிக்கிறார். இரண்டு பேரின் தரவரிசையின் கூட்டு எண்ணிக்கை சரியாக 160 ஆகும். இந்த சீசனில் கடைசி ஜோடியாக, விம்பிள்டன் இரட்டையரில் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்று இருக்கிறார்கள்.

ரோகன் போபண்ணாவுடன் இணைந்து சென்னை ஓபனில் மகுடம் சூடியவரான ஜீவன் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘காயத்தால் தன்னால் விளையாட இயலாது என்று ஹியோன் சொன்னதும் மன ரீதியாக சங்கடத்திற்கு ஆளானேன். அதே சமயம் விம்பிள்டனில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு முன்பாகவே கூறினாரே என்ற வகையில் சந்தோஷப்பட்டேன். இதன் பிறகு உடனடியாக டாப்-65 இடத்திற்குள் உள்ள இன்னொரு வீரரை தேட வேண்டியதானது. இந்த விஷயத்தில் ரோகன் போபண்ணா, எனது உடல்தகுதி நிபுணர் மனு பாஜ்பாய் ஆகியோர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினர்.

ஈஸ்ட்போர்ன் டென்னிசில் ஒற்றையர் பிரிவில் விளையாடும் ஜாரெட்டிடம் எனது நிலைமையை எடுத்து கூறி, இணைந்து விளையாட வருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் தனது பயிற்சியாளருடன் கலந்து பேசி விட்டு பதில் சொல்வதாக கூறினார். சில மணி நேரத்திற்கு பிறகு என்னுடன் இணைந்து களம் இறங்க சம்மதம் தெரிவித்தார். விம்பிள்டன், மிகப்பெரிய டென்னிஸ் தொடர். இந்த ஆண்டில் நானும் பங்கெடுக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

ஜீவன் நெடுஞ்செழியனோடு, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா, திவிஜ் சரண், புராவ் ராஜா ஆகிய இந்தியர்கள் இந்த முறை விம்பிள்டன் இரட்டையர் பிரதான சுற்றில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com