காஷ்மீர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ராஜ்நாத்சிங் பேட்டி

காஷ்மீர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ராஜ்நாத்சிங் பேட்டி
Published on

காஷ்மீர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் சமீபகலமாக ராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் போது இளைஞர்கள், ராணுவ வீரர்களின் மீது கல்வீசும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களின் கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபரை மனிதகேடயமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் ராணுவ தளபதி பிபின் ராவத் அந்த ராணுவ அதிகாரியை பாராட்டியதோடு, மறைமுக போரை நிறுத்த இது போன்ற புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார். ராணுவ தளபதியின் இந்த கருத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வரவேற்றார்.

இந்த நிலையில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியின் 3 ஆண்டு கால நிறைவையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணுவ தளபதியின் கருத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வரவேற்றிருப்பதில் தவறு ஏதும் இல்லை. சில நேரங்களில் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. இத்தகைய கேள்விகளுக்கு நேரடியாக ஆம், இல்லை என பதில் சொல்லிவிட முடியாது.

காஷ்மீரில் நிலவரம் தற்போது முன்னேறி உள்ளது. உலக அளவில் முஸ்லிம் மக்கள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா 2-ம் இடத்தில் இருக்கிறது. அப்படி இருந்தும் கூட ஐ,எஸ். பயங்கரவாதிகளால் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை.

அதேபோல் கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம் அந்த இயக்கம் முற்றிலுமாக நொறுக்கப்பட்டது. எல்லையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பயங்கரவாத ஊடுருவல் 45 சதவீதம் குறைந்து உள்ளது.

காஷ்மீர் மக்களின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல. காஷ்மீர் இளைஞர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த சில அமைப்புகள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றன.

காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முன் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com