ஒரு வாரத்துக்கும் மேலாக போடி மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி மாவட்டம் போடி மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
தீவிபத்து (கோப்புப்படம்)
தீவிபத்து (கோப்புப்படம்)
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மறக்காமலை, அகமலை, அம்பரப்பர் மலை, போடிமெட்டு மலைச்சாலையில் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அரியவகை மரங்களும் தாவரங்களும் தீயில் கருகி வருகின்றன. காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதி மான், கேளையாடு, காட்டுமாடு அதிகளவில் வசித்து வரும் பகுதியாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் வனப்பகுதிகளை விட்டு ஊருக்குள் புகும் அபாயமும் உள்ளது. இதுமட்டுமன்றி தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏலம் மற்றும் தேயிலை தோட்ட கூலித்தொழிலாளர்கள் வனப்பகுதி வழியாக ஆபத்தான முறையில் நடைபயணமாக சென்று வருகின்றனர்.

கடந்த மாதம் கேரளா பூப்பாறை அருகே உள்ள பேத்தொட்டி பகுதியில் இருந்து தமிழக வண்ணாத்துரை வனப்பகுதி வழியாக போடி ராசிங்கபுரத்தை சேர்ந்த 9 நபர்கள் ஏல தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று திரும்பியபோது வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 4 பேர் இறந்தனர்.

ஆபத்துக்களை உணராமல் தற்போதும் பழங்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய வனப்பாதைகளை கூலித்தொழிலாளர்கள் பயன்படுத்தி தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு சென்று வருகின்றனர். இதனை அறிந்த கேரள காவல்துறையினர் அனுமதியின்றி வனப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளா வரும் நபர்களை கைது செய்து 28 நாள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் உயிரிழப்புகள் ஏற்பட்டும் வனப்பகுதியில் வழியாக நடந்து செல்பவர்கள் மீது வனத்துறையினரும் காவல்துறையினரும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் மனித உயிர்களும் பலியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com