குமாரபாளையம் அருகே விபத்தில் இறந்த 6 பெண்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

குமாரபாளையம் அருகே விபத்தில் இறந்த 6 பெண்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே விபத்தில் இறந்த 6 பெண்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு
Published on

குமரபாளையம்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்டோர் ஈச்சர் வேனில் குமாரபாளையத்தில் இருந்து நேற்று மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டனர். வேனை குமாரபாளையத்தை சேர்ந்த கவுதம்(வயது 26) என்பவர் ஓட்டினார். அந்த வேன் வெப்படையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

காவடியான்காடு என்ற இடத்தில் வேன் சென்ற போது ஆக்சில் துண்டானதால் டிரைவர் கவுதமின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வேன் ஓடியது. அப்போது எதிரே பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி மீது மோதி வேன் கவிழ்ந்து உருண்டது.

இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியானார்கள். காயம் அடைந்த வேன் டிரைவர் கவுதம் உள்பட 13 பேரை பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.

2 பெண்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பலியானார்கள். இதை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

விபத்தில் பலியான பெண்கள் விவரம் வருமாறு:-

1.குமாரபாளையம், சடையம்பாளையத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்த பொன்னுசாமி மனைவி அய்யம்மாள்(60).

2.வேம்மங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த குமாரசாமி மனைவி வள்ளியம்மாள்(32).

3.வினோத்பாஜ் நகரை சேர்ந்த வரதராஜ் மனைவி சந்தரம்மாள்(60).

4.வினோபாஜ் நகரை சேர்ந்த முருகன் மனைவி கற்பகம்(53).

5.வினோபாஜ் நகரை சேர்ந்த நஞ்சப்பன் மனைவி பெருமாயி(55).

6.வினோபாஜ் நகரை சேர்ந்த பழனிசாமி மனைவி மாரியம்மாள்(58).

பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இன்று காலையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக டாக்டர்கள் மருத்துவ மனைக்கு வந்தனர். அப்போது டாக்டர்கள், பிணவறை முன்பு சோகத்துடன் கூடியிருந்த உறவினர்களிடம் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஆகவே இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காட்டுங்கள், உடற்கூறு ஆவணத்தில் கையெழுத்து போடுங்கள் என கூறினார்கள்.

அதற்கு உறவினர்கள், டாக்டர்களிடம் பலியான 6 பெண்களும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மில் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானத்தில்தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார்கள். தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வேனில் நேற்று வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வேன் விபத்தில் சிக்கியதால் 6 பெண்கள் பலியாகி உள்ளனர். ஆகவே மில் உரிமையாளர் இங்கு வர வேண்டும். அவர் பலியானவர்களின் உடல்களை பார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அதன் பிறகு தான் பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்து போடுவோம் என கூறினார்கள்.

பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களிடம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம், குமாரபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போது கையெழுத்து போட்டு விட்டு உடலை வாங்கிச் செல்லுங்கள். நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த சமாதான பேச்சு வார்த்தையை ஏற்க உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால் போலீசார், மில் உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்து, உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது மில் உரிமையாளர் உரிய நிவாரண தொகை வழங்குவதாகவும், தான் உடனே புறப்பட்டு மருத்துவ மனைக்கு வருவதாகவும் போலீசாரிடம் கூறினார். இது பற்றி போலீசார், பலியானவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com