

திருவொற்றியூர்:
மணலி பல்ஜி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வரியா (30). இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான விஜயன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று இரவு போதையில் வந்த விஜயனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த விஜயன் மனைவியை கடுமையாகத் தாக்கினார்.
இதுபற்றி ஐஸ்வர்யா காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100 க்கு போன் செய்து புகார் கூறினார். இதையடுத்து மணலி போலீஸ் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ் பெக்டர் ஏழுமலை, காவலர் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்தனர். மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த விஜயனை தடுத்து நிறுத்தினர்.
இதில் விஜயனுக்கும் போலீசாருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் ரமேஷ் ஆகியோரை தாக்கியுள்ளார். இதையடுத்து சக போலீசார் விஜயனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விஜயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.