

பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் என்பவரின் மகன் பிரபு (வயது 27). முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி இலக்கியா (27). மகன் ஜபிக்கல்ராஜ் (6). பிரபு தனது குடும்பத்தினருடன் பாபநாசம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பிரபு திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்த பிரபு தினமும் மது குடித்துள்ளார். இதனை கண்ட இலக்கியா நேற்று அவரை கண்டித்துள்ளார். பின்னர் மாலையில் பள்ளி சென்று மகனை அழைத்து வர சென்றுவிட்டார். அப்போது தனியாக வீட்டில் இருந்த பிரபு மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கிடையே வீடு திரும்பிய இலக்கியா, பிரபு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் பிரபுவை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே பிரபு இறந்து விட்டார்.
இதுபற்றி இலக்கியா பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் வேதநாயகி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.