திருவாரூர் அருகே மனைவியை தாக்கிய கணவன்-மாமியார் மகளிர் போலீசில் புகார்

திருவாரூர் அருகே தகராறில் மனைவியை தாக்கிய கணவன் மற்றும் மாமியார் குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பெரியமகாபுரத்தை சேர்ந்தவர் வினோத்ராஜ் (வயது 28) விவசாயி. இவரது மனைவி ரஞ்சனி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. காப்பனாமங்கலத்தில் உள்ள வீட்டில் 2 பேரும் வசித்து வந்தனர். ரஞ்சனி கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரஞ்சனியை பிரிந்து வினோத் ராஜ் பெரியமகாபுரத்தில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் ரஞ்சனி தனது கணவரிடம் வாருங்கள், நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த வினோத்ராஜ் மற்றும் அவரது தாய் ஜூலியட் சகாயமேரி ஆகிய 2 பேரும் சேர்ந்து ரஞ்சனியை சரமாரியாக தாக்கி எட்டி உதைத்தனர். இதில் ரஞ்சனிக்கு காயம் ஏற்பட்டு கர்ப்பம் கலைந்தது.

இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து வினோத்ராஜ், ஜூலியட் சகாயமேரியை விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com