

குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 32). இவர் மனைவி சரசு (32). இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் வீ.கோட்டா ராம குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சரசு அடிக்கடி சென்று விடுவார். கணவர் வந்து மன்றாடி அழைக்கும் வரை தாய் வீட்டிலேயே இருப்பார்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற சரசு, கணவர் அழைத்தும் மீண்டும் சேர்ந்து வாழ வர மறுத்து விட்டார். 3 மாதங்களுக்கு சமரசமடைந்த சரசு, கணவருடன் சேர்ந்து வாழ குடியாத்தம் வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கணவருடன் இருந்த சரசுக்கு தகராறு ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த சரசு, கத்தியை எடுத்து கணவரின் ஆண் உறுப்பை அறுத்தெடுத்தார்.
துண்டித்த ஆண் உறுப்பை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சரசு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, ஜெகதீசன் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரசுவை தேடி வந்தனர். ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் அவர் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆந்திரா விரைந்த போலீசார், தலைமறைவாக இருந்த சரசுவை நேற்றிரவு கைது செய்தனர். குடியாத்தம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒரு ஆண்டாக பிரிந்திருந்த போது, ஜெகதீசனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சரசு மீண்டும் சேர்ந்து வாழ்ந்த நேரத்தில் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. நடத்தை மீதான தகராறில் தான் கணவரின் ஆண் உறுப்பை துண்டித்ததாக சரசு கூறி உள்ளார்.
மேலும், அறுத்தெடுத்த ஆண் உறுப்பை வீசி எறிந்து விட்டதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.