அந்நிய முதலீடு விவகாரத்தில் தன் மகன் மீது பாரபட்சமான நடவடிக்கை: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

அந்நிய முதலீடு விவகாரத்தில் 6 செயலாளர்களின் பெயரை சிபிஐ ஏன் குற்றம்சாட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்நிய முதலீடு விவகாரத்தில் தன் மகன் மீது பாரபட்சமான நடவடிக்கை: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
Published on

சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், 2007-08-ல் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல, சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அந்நிய முதலீடு விவகாரத்தில் 6 செயலாளர்களின் பெயரை சிபிஐ ஏன் குற்றம்சாட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம், ”அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி தந்தது தவறு என்றால் 6 செயலாளர்களின் பேரையும் சேர்க்க வேண்டியது தானே? 6 செயலாளர்களும் குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்டவர்களா” என்று வினவியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com