முதல்வராக தேர்வு செய்தபோது சசிகலாவை பதவி ஏற்க அழைக்காதது ஏன்?: வித்யாசாகர் ராவ் விளக்கம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக பதவியேற்க ஏன் அழைப்பு விடுக்க வில்லை? என்று முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் நினைவு புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வராக தேர்வு செய்தபோது சசிகலாவை பதவி ஏற்க அழைக்காதது ஏன்?: வித்யாசாகர் ராவ் விளக்கம்
Published on

சென்னை:

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து முழு நேர கவர்னர் நியமிக்கப்படாததால் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் தற்காலிக கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற அவர் கடந்த மாதம் வரை சரியாக ஓராண்டுகள் தற்காலிக கவர்னர் பொறுப்பை வகித்தார்.

அந்த ஓராண்டில் ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஓ.பி.எஸ். ராஜினாமா, எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பு, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு, தி.மு.க.வின் போராட்டம் என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. சவால் மிகுந்த இந்த நிகழ்வுகளை சட்ட நிபுணர்கள் துணையுடன் வித்யாசாகர் ராவ் மிக, மிக சாமர்த்தியமாக சமாளித்தார்.

அந்த நிகழ்வுகளை, நினைவுகளை அவர் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்துக்கு “அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் இருவரும் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் வெளியிட்டனர்.

கவர்னர் மாளிகை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சம்பவத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளார். முதல் 3 அத்தியாயங்களில் ஜெயலலிதா பற்றி எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன. ஜெயலலிதா உடல்நிலை பற்றிய விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தபோது ஏற்பட்ட பரபரப்பு பற்றி விவரித்துள்ள வித்யாசாகர் ராவ் தமிழக மக்கள் அமைதியான முறையில் நடந்து கொண்டதை சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது பற்றி எழுதியுள்ளார்.

நான்காவது அத்தியாயத்தில் சென்னையை வார்தா புயல் உலுக்கியது பற்றி குறிப்பிட்டுள்ளார். வார்தா புயல் பாதிப்பில் இருந்து மீள தான் எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டி காட்டியுள்ளார்.

5-வது அத்தியாயத்தில் ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் பற்றி விரிவாக எழுதியுள்ளார். தமிழக மக்களின் மன உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று கொடுத்ததில் தனது பங்கு எப்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

6-வது அத்தியாயத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா மற்றும் ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரி இருந்தது பற்றிய தகவல்களை மிகவும் விறுவிறுப்புடன் வித்யாசாகர் ராவ் எழுதியிருக்கிறார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

ஓ.பி.எஸ். பதவி விலகியதும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்வானார். ஆனால் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வித்யாசாகர் ராவ் அவசரம் காட்டவில்லை.

சசிகலாவை முதல்- அமைச்சராக பதவி ஏற்க வரும்படி வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலா மிரட்டும் தொனியில் அறிக்கை விட்டபோது கூட அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

இதுபற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள வித்யாசாகர் ராவ், அந்த சமயத்தில் சசிகலாவை அழைக்காதது ஏன்? என்பது பற்றியும் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் கவர்னர் அவசரப்படவில்லை. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட இருந்ததால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார். அந்த முடிவின்படி செயல்பட்டதால் அவர் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அறிவித்தது. இதுபற்றி எழுதிய பத்திரிகைகள், கவர்னர் வித்யாசாகர் எடுத்த முடிவை பாராட்டின. கவர்னர் அவசரப்பட்டிருந்தால் அது தமிழக அரசியலில் கரும்புள்ளியாக மாறி இருக்கும். எனவே வித்யாசாகர் ராவ் மிக பொறுமையாக நடந்து கொண்டது அவரது முதிர்ச்சியை காட்டுவதாக எழுதியிருந்தன.

இந்த பாராட்டும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வரை தமிழக கவர்னர் பொறுப்பை வகித்தது பற்றி அவர் தகவல்களை இடம் பெறச் செய்துள்ளார். ஆனால் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தன்னை வந்து சந்தித்தது பற்றிய எந்த தகவல்களையும் அவர் குறிப்பிடவில்லை.

அதுபோல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி வழங்கிய கடிதம் பற்றியும் எதுவும் எழுதவில்லை. இதன் மூலம் வித்யாசாகர் ராவ் தனது புத்தகத்தில் டி.டி.வி.தினகரனையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

7-வது அத்தியாயத்தில் துணை வேந்தர்கள் நியமனம், 8-வது அத்தியாயத்தில் கவர்னர் மாளிகையில் சூரிய ஒளி மின் திட்டம் அமைத்தது, 9-வது அத்தியாயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கவர்னர் மாளிகை திறக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10-வது அத்தியாயத்தில் கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை திறப்பு, 11-வது அத்தியாயத்தில் சுத்தப்படுத்தும் திட்டம், 12-வது அத்தியாயத்தில் ஜனாதிபதி, பிரதமருடன் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியது பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார்.

வித்யாசாகர் ராவின் நடவடிக்கைகளை சொல்லும் இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அப்போது இந்த புத்தகம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com