கொடநாடு பங்களா ரகசியங்கள் குறித்து கொள்ளை கும்பலுக்கு உளவு சொன்னது யார்?

கொடநாடு பங்களா கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் பிடித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொடநாடு பங்களா ரகசியங்கள் குறித்து கொள்ளை கும்பலுக்கு உளவு சொன்னது யார்?
Published on

நீலகிரி:

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை-கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் நீடிக்கிறது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என போலீசார் கூறும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 2012-ம் ஆண்டே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அதன்பிறகு சென்னையில் தான் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை கொடநாடு பங்களா அதிக பாதுகாப்பு வசதியுடன் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு பாதுகாப்பு வசதிகள் குறைக்கப்பட்டன. தனியார் நிறுவன காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் அவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதோடு பங்களாவை சுற்றியிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அகற்றி உள்ளனர். இது பங்களாவுக்குள் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பங்களாவுக்கு அடிக்கடி சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு படைத்த அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு மட்டும் தான் தெரிந்துள்ளது.

எனவே பாதுகாப்பு ரகசியங்கள் குறித்து இவர்களில் யார் மூலமாகவோ தான் கனகராஜிக்கு தகவல் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதோடு, சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை பங்களாவில் பர்னிச்சர் வேலை செய்வதற்காக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் சென்றுள்ளார். ஆனால் என்ன காரணத்துக்காகவோ அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் பிடித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர்கள், ஊழியர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com