பெண் எம்.எல்.ஏ. வீட்டில் நாய்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது யார்? போலீசார் தீவிர விசாரணை

சேலம் அருகே பெண் எம்.எல்.ஏ. வீட்டில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 நாய்களும் இறந்துகிடந்த காட்சி
3 நாய்களும் இறந்துகிடந்த காட்சி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மனோன்மணி. இவர் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பாரப்பட்டி கிராமத்தில் சோலைக் கவுண்டர் தோட்டம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தை யொட்டி குடும்பத்தினருடன் மனோன்மணி எம்.எல்.ஏ. கோவிலுக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் வளர்த்து வந்த 3 நாய்களும் இறந்துகிடந்தன. இதில் ஒரு நாய் வீட்டு வாசலிலும் மற்றொரு நாய் வீட்டின் பின்புறமும், இன்னொரு நாய் தோட்டத்திலும் மர்மமான முறையில் செத்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே கால்நடை டாக்டருடன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் செத்துகிடந்த 3 நாய்களின் உடலை பிரேத பரிசாதனை செய்தனர். மேலும் நாய்களின் உடல் கூறுகள் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட தகவலில் நாய்களை வி‌ஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே எந்த மாதிரியான வி‌ஷம் கொடுத்து நாய்கள் கொல்லப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வீட்டின் முன்பு உள்ள காமிரா பதிவுகளை வைத்து யாராவது மர்ம நபர்கள் வந்து சென்றார்களா? சந்தேகத்துக்கு இடமாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்தார்களா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தற்போது எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் பனமரத்துப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதனால் தேர்தல் விரோதத்தில் மனோன்மணி எம்.எல்.ஏ. மீதான ஆத்திரத்தில் அவரது நாய்களை கொன்று அவருக்கு யாராவது மிரட்டல் விடுத்திருப்பார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் மனோன்மணி எம்.எல்.ஏ.வுக்கு கடந்த சட்டசபை தேர்தலின் போது கொலை மிரட்டல்கள் வந்ததால் அவருக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் அவரது வீட்டில் வளர்த்த 3 நாய்கள் மர்மமாக செத்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com