

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் அடிக்கடி உச்சரிக்கப்படும் இந்த வார்த்தை இப்போது அ.தி.மு.க.வினர் மத்தியில் இப்போது பிரளயமாக பரவிக்கிடக்கிறது.
சிலீப்பர் செல் தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக ஊடுருவி இருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் அதிரடி தாக்குதலை நடத்தி எதிராளியை வீழ்த்துவார்கள். அவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. சிலீப்பர் செல் தீவிரவாதிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி விவரமாக விளக்கியது துப்பாக்கி திரைப்படம்.
இந்த படம் வெளியான பின்னர்தான் சாமானிய மக்களும் சிலீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கினர்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்த பின்னர் இந்த குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன், எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி சவாலாக திகழ்ந்து வருகிறார்.
கட்சியில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்து விட்டு ஓ.பி.எஸ்.சுடன் எடப்பாடி கைகோர்த்ததை தினகரன் கவுரவ பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பகடைக் காயாக பயன்படுத்தி எடப்பாடியை வீழ்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய பின்னரே அரசியல் களத்தில் உஷ்ணம் அதிகரித்தது. இந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், அவர்கள் சிலீப்பர் செல்களை போல பதுங்கி இருக்கிறார்கள் என்றும் தினகரன் போட்ட குண்டு எப்போது வெடிக்கும் என்று தெரியவில்லை.
சிலீப்பர் செல்கள் என்று தினகரன் குறிப்பிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எடப்பாடி பழனிசாமி அணியில் பதுங்கி இருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதில் அமைச்சர்கள் சிலரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி அணியில் இருந்து கொண்டே தங்களது சிலீப்பர் செல் வேலையை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினகரனுக்கு எதிராக எடப்பாடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நொடிக்கு நொடி அவர்கள் கசிய விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி உளவு பார்க்கும் எம்.எல்.ஏ.க்கள் யார்-யார் என்பதை கண்டறிய எடப்பாடி அணியினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக உளவு பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்பதை எடப்பாடி பழனிசாமி அணியினரும் உணர்ந்துள்ளனர்.
இதனால் அது போன்றவர்களை கண்டுபிடித்து அவர்களை கண்டிக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் எண்ணமாக உள்ளது. அதே நேரத்தில் தினகரன் அணியினரோ, சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்களை வைத்தே எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்பதில் துடிப்புடன் உள்ளனர்.
இதற்கிடையே எடப்பாடி அணியில், உள்ள எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர், ஒருவரையொருவர் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் நிலவுகிறது. அந்த ஆள் சிலீப்பர் செல்லா இருப்பாரோ? இந்த ஆள் சிலீப்பர் செல்லா இருப்பாரோ என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டுள்ளனர்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் யார்-யார்? என்பதை கண்டு பிடிக்கும் வேட்டையில் உளவு பிரிவு போலீசார் வேகம் காட்டி வருகிறார்கள். இப்படி அ.தி.மு.க.வில் ஆபத்தானவர்களாக விளங்கும் சிலீப்பர் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் வெகுண்டு எழலாம் என்கிற பரபரப்பும் எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் அனலாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.