

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வெளியிட்டது.
தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்ட தண்ணீர் அளவைவிட 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக ஒதுக்கீடு செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததால் தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். காவிரி டெல்டா பாசன பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறிவிடும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீரை திறந்து விட 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் பிரச்சினை ஓரளவு தீரும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா மாநில அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா என்பதில் சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க 9-ந்தேதி டெல்லி வருமாறு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு மத்திய நீர் வளத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபயேந்திர பிரசாத் சிங் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பொதுப் பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் இருந்து அம்மாநில தலைமை செயலாளர் ரத்ன பிரபா தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடகா மாநில அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி முடிவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மேலும் தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை இடைக்கால நடவடிக்கை என்ற அடிப்படையிலாவது திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக 4 மாநிலங்களும் தங்கள் செயல் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நாளையே தனது செயல்திட்டத்தை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்று கர்நாடகம் கூறியிருப்பதால், வேறு தீர்வையே கர்நாடக அரசு முன்வைக்கும் என கூறப்படுகிறது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் பேசுகையில், ‘காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம். மேலாண்மை வாரியம் என்ற விஷயத்தை உச்சநீதிமன்றம் கூறவில்லை, திட்டம் என்று மட்டுமே கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்குள் காவிரி நதிநீர் தொடர்பான செயல்திட்டம் உருவாக்கப்படும். அது காவிரி மேலாண்மை வாரியமாக கூட இருக்கலாம்’ என்றார். #Cauveryverdict #CauveryWater #tamilnews