கிணற்றில் பிணமாக மிதந்தவர் கூலி தொழிலாளி- தந்தை அடையாளம் காட்டினார்

களியக்காவிளை அருகே கிணற்றில் பிணமாக மிதந்தவர் கூலி தொழிலாளி என்று தந்தை அடையாளம் காட்டியதால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றில் பிணமாக மிதந்தவர் கூலி தொழிலாளி- தந்தை அடையாளம் காட்டினார்
Published on

குழித்துறை:

களியக்காவிளை அருகே குறுமத்தூரில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது கிணறு உள்ளது. இக்கிணற்றில் அப்பகுதி மக்கள் தினமும் தண்ணீர் எடுப்பது வழக்கம். நேற்றும் இதுபோல கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க அப்பகுதி பெண்கள் சென்றனர்.

அப்போது கிணற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை கண்டனர். உடனே அவர்கள் இது பற்றி ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது பற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தெரிவித்தனர்.

குழித்துறை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து களியக்காவிளை போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அந்த வாலிபர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

இதற்கிடையே கிணற்றில் பிணமாக மிதந்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் களியக்காவிளை போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியில் மாயமானவர்கள் பட்டியலை திரட்டி அதில் இருந்தவர்கள் யாராவது உள்ளனரா? என்று விசாரித்தனர்.

இதில் குறுமத்தூரை சேர்ந்த ஜோஸ் (வயது 32) என்ற வாலிபர் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்தது தெரியவந்தது. ஜோசுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

கூலி தொழிலாளியான ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்தார். சம்பவதன்று அவர் தந்தையின் சட்டையை அணிந்தபடி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

ஜோசின் பெற்றோர் அவரை தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணம் கிடக்கும் தகவலை போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜோசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஜோஸ் அணிந்திருந்த சட்டை மூலம் அவர் ஜோஸ்தான் என்பதை அவரது தந்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com