

ராஜபாளையம்:
ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலியைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு ஊடை நூல் வழங்கப்படவில்லை. இதனால் 3 மாத காலம் வேலையின்றி தவிப்பதாக கூறி புனல்வேலி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் அருகில், விரைவில் ஊடை நூல் வழங்கக்கோரி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நெசவாளர்கள் உள்பட அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெசவாளர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படவில்லை என்றால் மாபெரும் மறியல் போராட்டமாக உருவாகும். நெசவாளர்களுக்கு ஊடை நூல் வழங்க வேண்டி விருதுநகரில் உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்கையில் மும்பையில் ஆர்டர் செய்துள்ளதால் ஊடை நூல் இன்று தருகிறோம், நாளை தருகிறோம் என இழுத்தடிப்பதால் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நெசவாளர்களின் கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமசந்திரனிடம் ஆலோசனை செய்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று சட்ட சபையில் குரல் எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, நகர செயலாளர் ராமமூர்த்தி, பேருர் செயலாளர் இளங்கோவன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், நெசவாளர்கள், பொதுமக்கள் என 800 பேர் கலந்து கொண்டனர்.
ஆண்டு முழுவதும் நெசவுத்தொழில் தடையின்றி வழங்கிடு, ஜனதா, காடா, துப்பட்டா, ரகத்திற்கு தமிழக அரசே கூலி உயர்வு வழங்கிடு, பெடல் தறி (7ஆண்டு காலம்) 2014ல் காடாவுக்கு கொடுத்த கூலியை திருப்பிக்கொடு, வங்கிகளால் நெசவாளர்கள் பெற்ற கடனை செலுத்திய போதும் மானியத்தொகையை மற்றும் வட்டி மானியத்தை நெசவாளர் வங்கி கணக்கில் வரவு செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நெசவாளர்களின் வீடுகளுக்கு சென்று தறிகளை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். #tamilnews