

ஜனாதிபதியை ஒரு மனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கான கடைசி நாள் 28-ந்தேதி ஆகும். இந்த மனுக் கள் பரிசீலனை 29-ந் தேதி எனவும், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 1-ந்தேதி எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் ஜூலை 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 20-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. எனினும் இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவே பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவர் குழு ஒன்றை பா.ஜனதா தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார்.
மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோரை கொண்ட இந்த குழுவினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை இன்று (வெள்ளிக் கிழமை) சந்தித்து பேசுகின்றனர். இதைப்போல எதிர்க்கட்சிகளின் சார்பிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நேற்று முன்தினம் டெல்லியில் கூடி ஜனாதிபதி தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என அந்த கட்சி கூறியுள்ளது. கட்சித்தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம். இதையே நாங்கள் கடந்த காலங்களிலும் கூறியிருக்கிறோம். எனினும் தற்போதைய நிலையில் அதற் கான சூழல் இன்னும் உருவாகவில்லை’ என்றார்.
புதிய ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்து உள்ளதால், பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளும் என தெரிகிறது. இதன் மூலம் புதிய ஜனாதிபதி வேட்பாளரை இந்த கட்சிகள் இணைந்து தேர்வு செய்யும் என கூறப்படுகிறது.