கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு

கவர்னர் முடிவுக்கு பிறகு தினகரன் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு
Published on

எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

அவர்கள் 19 பேரும் டி.டி.வி.தினகரன் வீட்டில் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பிறகு கவர்னரிடம் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

இதை சரி செய்ய தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி தரப்பினர் இழுக்கக்கூடும் என தினகரன் கருதினார். எனவே, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

தமிழ்நாட்டில் தங்க வைத்தால் அரசு மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என கருதிய அவர் மாற்று கட்சி ஆட்சி நடக்கும் புதுவையில் தங்க வைக்கலாம் என்று முடிவு எடுத்தார். இதற்காக சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டை தேர்வு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் புதுவையில் வின்ட் பிளவர் ரிசார்ட்டும் பாதுகாப்பானதாக இருக்கும் என கருதி எம்.எல்.ஏ.க்கள் இங்கு தங்க வைக்கப்பட்டார்கள்.

புதுச்சேரி வின்ட்பிளவர் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்காக மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. வெற்றிவேல் தவிர, 18 எம்.எல்.ஏ.க்களும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெண் எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பரந்தாமன், சந்திர பிரபா, உமா மகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கணவருடன் வந்தனர். அவர்களுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மற்ற ஆண் எம்.எல்.ஏ.க்களுடன் நண்பர்கள், உதவியாளர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் விடுதி உள்பகுதியில் தாராளமாக நடமாடி வருகிறார்கள். விடுதி வாசலில் தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு கெடுபிடி எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தாலும் புதுவை போலீசார் இதை முதலில் கண்டு கொள்ளவில்லை. பெயரளவுக்கு அந்த விடுதிக்கு சென்று பார்த்து விட்டு வந்து விட்டனர்.

ஆனால், பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கருதி இன்று காலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை நீக்க கவர்னரிடம் கடிதம் கொடுத்தது பற்றி எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவிக்கையில், கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

கவர்னர் முடிவுக்கு பிறகு தினகரன் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சி மக்கள் நலனுக்காகவே நடந்த ஆட்சி. அந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்று சேர்ந்து ஆதரவு அளித்தோம்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மாவின் திட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

அதனால் இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் விலக்கி கொள்கிறோம் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

அதனால் கவர்னரின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும். 6 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என கடிதம் கொடுத்தோம். இப்போது அந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்து இருக்கிறோம்.

இந்த அரசு எல்லாவற்றிலும் உச்சக்கட்டத்தில் உள்ளது. அம்மாவின் திட்டங்களை அழிப்பதிலும் உச்சக்கட்டம், ஆணவத்திலும் உச்சத்தில் இருக்கிறது. அதனால் இப்போது உச்சக்கட்ட போர் நடக்கிறது.

“தாலிக்கு தங்கம்” கொடுக்கும் அம்மாவின் திட்டத்திற்கே என்னிடம் லஞ்சம் கேட்கிறார்கள். இதைவிட மோசமான நிலையை சொல்ல முடியாது.

19 எம்.எல்.ஏ.க்களும் உறுதியாக இருக்கிறோம். மேலும் சிலர் எங்கள் பக்கம் வரத்தயாராக இருக்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வருவதால் எங்கள் பலம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com