

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருந்தது.
அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப், 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரண்டு போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் நாளை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை பஞ்சாப் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா போட்டியாகும்.
பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் டெவாட்டியா கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். நாளை புனேவை சந்திக்கும் போட்டியை இறுதிப் போட்டியாக கருதுவோம் என்று இவர் கூறியுள்ளார்.
மேலும், புனே அணிக்கெதிரான போட்டி குறித்து டெவாட்டியா கூறுகையில் ‘‘எதிரணி எப்படி விளையாடுகிறது என்பதை சார்ந்து எங்களால் இருக்க முடியாது. நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். நாளை புனே அணிக்கெதிரான போட்டி எங்களுக்கு இறுதிப்போட்டி. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதனால் சிறந்த முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.